ரூ.30 ஆயிரம் லஞ்சம் : மதுரை எஸ்.ஐ., கைது
மதுரை; மதுரையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சண்முகநாதன் 35, கைது செய்யப்பட்டார்.மதுரை எச்.எம்.எஸ்., காலனியைச் சேர்ந்தவர் கவிதா 45. இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்தபோது முன்விரோதமாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரை கைது செய்ய ஜெய்ஹிந்த்புரம் ஸ்டேஷன் எஸ்.ஐ., சண்முகநாதன் ரூ.ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார். கவிதா தயங்கியதால் ரூ.70 ஆயிரமாவது தருமாறு 3 நாட்களாக கேட்டார்.இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் கவிதா புகார் செய்தார். நேற்று மாலை ரூ.30 ஆயிரம் தயாராக இருப்பதாக எஸ்.ஐ.,க்கு கவிதா தகவல் தெரிவித்தார். சூர்யா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சீருடை அணிந்து டூவீலரில் புறப்பட்ட எஸ்.ஐ., சண்முகநாதன், புதுார் பஸ் டெப்போ அருகே லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டு டூவீலர் 'பவுச்சில்' வைத்தபோது அவரை டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூரியகலா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவரை 'சஸ்பெண்ட்' செய்ய கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.