உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் புதிய முனையம் அமைக்க போராட்டம்

ராயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் புதிய முனையம் அமைக்க போராட்டம்

மதுரை : சென்னை ராயபுரம் ரயில்வே ஸ்டேஷனை மூன்றாவது பிரதான முனையமாக உருவாக்க வலியுறுத்தி ஆக.,15 க்கு பின் போராட்டம் நடத்த மடீட்சியா, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், ரயில் உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.மதுரையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், மடீட்சியா தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். ரயில் உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகி போஸ் பேசியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இட நெருக்கடியால், 10 ரயில்கள் எழும்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன. தீர்வாக தாம்பரம் ஸ்டேஷனில் மூன்றாவது முனையம் அமைக்கும் பணி நடக்கிறது. இது பயன்பாட்டிற்கு வந்தால், தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாம்பரத்தில் நிறுத்தும் நிலை ஏற்படும். தென் மாவட்ட பயணிகள் தாம்பரத்திலிருந்து மின்சார ரயில் அல்லது வாகனங்கள் மூலம் சென்னைக்கு 35 கி.மீ.,பயணம் செய்ய வேண்டும். நேரம், பண விரயம், நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்க, தற்போது எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை, எழும்பூரிலிருந்தே இயக்க வேண்டும். சென்ட்ரல் அருகில் இந்தியாவின் மூன்றாவது ரயில்வே ஸ்டேஷனாக துவக்கப்பட்ட, 72 ஏக்கர் பரப்புள்ள ராயபுரத்தை மூன்றாவது முனையமாக உருவாக்க வேண்டும். இதனால், கோல்கட்டா, அசாம் ரயில்கள் ராயபுரத்திலிருந்தும், பிற வடமாநில ரயில்கள் சென்ட்ரலிலிருந்தும் செல்ல ஏதுவாக இருக்கும். தவறான உள்நோக்குடன் ராயபுரத்தை புறக்கணிக்கின்றனர். மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஆக.,8 ல் மனு அளிக்கப்படும். தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஆக.,15 க்கு பின் மனிதச் சங்கிலி உட்பட பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மடீட்சியா கவுரவ செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை