| ADDED : ஜன 01, 2024 05:41 AM
எழுமலை; மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம்- - மயிலாடும்பாறை ரோட்டை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்ற கோரிக்கை, லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி வலுப்பெற்று வருகிறது.மதுரை மாவட்டத்தில் எழுமலை அருகே மல்லப்புரம் மலையடிவாரத்தில் இருந்து தேனி மாவட்டம் மயிலாடும்பாறை உள்ளிட்ட உள்காடு மற்றும் சின்னமனுார், கம்பம் பகுதிகளை இணைக்கும் 10 கி.மீ., மலைப்பாதை 50 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.தற்போது ராஜபாளையம், எழுமலை, பேரையூர் பகுதிகளில் இருந்து தேனி மாவட்டம் செல்ல உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது.இதற்கு மாற்றாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கண்ட மல்லப்புரம் - மயிலாடும்பாறை மலைப்பகுதியில் சாம்பல்நிற அணில்களின் சரணாலயம் இருப்பதால் வனத்துறையினர் தொடர்ந்து போக்குவரத்துக்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.இருப்பினும் டூவீலர்கள், கார்கள், சிறிய லோடுவேன்கள் இந்த மலைப்பாதையில் சென்று வருகின்றன. இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பும் தேர்தல் காலத்தில் இக்கோரிக்கை எழுப்பப்பட்டது. இதையடுத்து அப்போது அரசு பஸ் போக்குவரத்து நடந்தது. சில நாட்களில் வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் நிறுத்தப்பட்டது.தற்போது மீண்டும் தேர்தல் நெருங்குவதால் இந்தப்பகுதியினர் ரோட்டில் மேடு பள்ளங்களை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக எம்.கல்லுப்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்துள்ளனர்.