உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலுவை வழக்குகளுக்கு சமரச தீர்வு முகாம்: செப்.30 வரை நடக்கிறது

நிலுவை வழக்குகளுக்கு சமரச தீர்வு முகாம்: செப்.30 வரை நடக்கிறது

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சமரச தீர்வு மையம் மூலம் செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகாம் நடக்கிறது என முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: குடும்ப பிரச்னை, குடும்ப வன்முறை, பாகப்பிரிவினை, வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, கடன் உறுதிச் சீட்டு, வர்த்தக பிரச்னை, வாடகை தகராறு, நில ஆர்ஜிதம், சமரசத்திற்குட்பட்ட குற்றவியல் வழக்குகள், இதர சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணலாம். மதுரை, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், மேலுார் நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்படுகின்றன. நிலுவையிலுள்ள வழக்குகளை நேரடியாக அல்லது வழக்கறிஞர் மூலமாக சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். சமரசர் முன்னிலையில் எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். புகார்தாரர்கள் தங்களின் வழக்கறிஞருடன் பங்கேற்கலாம். சமரசம் ஏற்படவில்லை எனில் வழக்கை நீதிமன்றத்தில் தொடரலாம். சமரச மையத்தில் தீர்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம். சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப தகுதியான வழக்குகள் நீதிமன்ற பரிந்துரையின்பேரில் ஏற்கப்பட்டு, மனுதாரர், எதிர்மனுதாரர்களை அழைத்து ஒன்றாக அமர வைத்து பேச ஏற்பாடு செய்யப்படும். பின் இருவரையும் தனித்தனியாக அழைத்து பேசுவர். தெரிவிக்கும் கருத்துக்கள் ரகசியம் காக்கப்படும். இருதரப்பிற்கும் வெற்றி என்ற நிலை உருவாகும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வே இறுதியானது. இதற்கு மேல்முறையீடு கிடையாது. வணிக ரீதியான வழக்குகள் முதலில் சமரசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் நீதிமன்றம் செல்கிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீர்வு மையம் செயல்படுகிறது. சமரச மையத்தில் நேரடியாக அல்லது ஆன்லைன் மூலம் ஆஜராகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !