குன்றத்து லட்சுமி தீர்த்த குளத்தில் ஓம் முருகா டிஜிட்டல் போர்டு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் லட்சுமி தீர்த்த குளத்தின் கிழக்கு பகுதியில் 'ஓம்முருகா' எழுத்துக்களுடன் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டு வருகிறது. கோயில் சார்பில் இக்குளம் ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டது. இதனுடன் குளத்தின் உட்பகுதியை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு சிமென்ட் துாண்களும் அதன்மேல் பகுதியில் சுதை வேலைகளும், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்டுகளும் அமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. மரங்கள் வளர்ந்து குளத்திற்கு மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றிலும் மேல்பகுதியில் 4 மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கப்பட்டன. குளத்தின் மையப் பகுதியில் முன்பு கருங்கல் பீடமும் அதில் மின் விளக்கும் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது லட்சுமி தீர்த்த குளத்தின் பெயருக்கு ஏற்ப கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு அமர்ந்த நிலையில் லட்சுமியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தை சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். தற்போது குளத்தின் கிழக்குப் பகுதியில் 'ஓம் முருகா' என்ற எழுத்துக்களுடன் நவீன டிஜிட்டல் போர்டு உபயதாரர் மூலம் அமைக்கும் பணி நடக்கிறது.