உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் நாற்று உற்பத்திக்கு பாசனத்தண்ணீர் திறப்பு

நெல் நாற்று உற்பத்திக்கு பாசனத்தண்ணீர் திறப்பு

மதுரை: 'பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக சாகுபடியின் நெல் நாற்று நடவுப்பணிக்காக வைகை அணையில் இருந்து தினமும் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாக' நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன் தெரிவித்தார். முல்லைப்பெரியாறு பாசனத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கரில் இருபோக பாசனமும், மேலுார், திருமங்கலத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கருக்கு ஒருபோக பாசனமும் நடக்கிறது. முதல்போக பாசனம் முடிந்த நிலையில் நெல் அறுவடை பணிகள் நடக்கின்றன. அறுவடை முடிந்த பகுதிகளில் இரண்டாம் போகத்திற்கான உழவுப்பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். உழவுக்கும் நெல் நாற்று உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் தேவைப்படு வதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கூறுகையில், 'நாற்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். நாற்று நடுவதற்கு முன்பாக நிலத்தில் தண்ணீரை தேக்க வேண்டும். பெரியாறு பிரதான கால்வாய் வழியாக நேரடி பாசனத்தில் பயன்பெறும் விவசாயிகள், மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை கால்வாயில் இருந்து திறந்துவிட வேண்டும்' என்றனர். செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன் கூறுகையில்,''பாசனத்திற்கு தினமும் 500 கனஅடி வீதம் தண்ணீர் (நேற்று) திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படும். இன்னும் சில பகுதிகளில் முதல்போக அறுவடை முடியாததால் தண்ணீரின் அளவை குறைத்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை