தாமதமாகும் திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
திருமங்கலம் :திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகள் மெதுவாக நடப்பதால் திறப்பு விழா தாமதமாகி வருகிறது. திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை ரூ. 1.54 கோடி செலவில் பராமரிக்க முடிவு செய்து, கடந்த மேயில் பணிகள் துவங்கின. தற்காலிகமாக தெற்கு தெரு பகுதியில் தனியார் இடத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இரண்டே மாதங்களில் வேலை முடியும் என்றுகூறி தொடங்கிய நிலையில், தற்போது 100 நாட்களை கடந்தும் பணிகள் முடிந்தபாடில்லை. இதனால் கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் உரிய நேரத்தில் வந்து செல்வதில் குளறுபடி ஏற்படுகிறது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். தற்காலிக பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாததே அவதிக்கு காரணம். நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், 'பணிகளை விரைவாக முடிக்க ஒப் பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். செப். 15ல் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்' என்றார். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தினர்.