உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாற்பாலையை இடித்துவிட்டு மினி ஸ்டேடியம் அமைக்க எதிர்ப்பு

நுாற்பாலையை இடித்துவிட்டு மினி ஸ்டேடியம் அமைக்க எதிர்ப்பு

மேலுார்: 'மேலுார் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய நுாற்பாலையை இடித்துவிட்டு மினி ஸ்டேடியம் அமைக்க உள்ளதால் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கும்' என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு. மேலுார் நகராட்சி 27 ஆவது வார்டில் 1967 ல் அப்போதைய அமைச்சர் கக்கனால் மதுரை மாவட்ட கூட்டுறவு நுாற்பாலை திறக்கப்பட்டது. ஐம்பது ஏக்கர் பரப்பிலான வளாகத்தில் நுாற்பாலை, கோடவுன், அலுவலகம், அதிகாரிகள் தங்கும் அறை, உணவகம், வாகனம் நிறுத்துமிடம் என எல்லா வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் வீதம் 3 ஷிப்டுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். மேலுார் மக்களின் வாழ்வாதாரமாக இயங்கிய நுாற்பாலை காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் மூடப்பட்டது. தற்போது இந்த நுாற்பாலையை மினி ஸ்டேடியமாக மாற்றுவதற்காக, சுற்றுச்சுவர் கட்ட துவங்கி உள்ளனர். சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறியதாவது: கற்களால் கட்டிய நுாற்பாலை இன்றும் வலுவான நிலையில் உள்ளது. தொழில் துவங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளோடும் உள்ளதால் அரசு புதிய தொழில் துவங்க முன்வர வேண்டும். அல்லது தனியார் தொழிற்சாலைக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நுாற்பாலையை இடித்துவிட்டு ரூ. 3 கோடியில் கூடைப்பந்து, புட்பால், ஜிம், பூப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டு மைதானத்துடன்ய மினி ஸ்டேடியம் அமைக்க உள்ளனர். அதனால் அரசு மேலுார் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு நுாற்பாலையில் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை