| ADDED : டிச 27, 2025 06:59 AM
மதுரை: மதுரை அழகர்மலை, சிறுமலையில் 10 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட 'ஆர்கிட்' மலர்கள், தற்போது மீண்டும் பூக்கத் துவங்கியுள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள 'ஆர்கிட்' மலர்களை மீட்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா, இலங்கையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும் அரியவகை தாவரம் 'ஆர்கிட்'. மதுரை அழகர்கோவில் மலைப்பகுதி, சிறுமலை பகுதிகளில் பத்தாண்டுகளுக்கு முன் இவை அதிகளவில் காணப்பட்டன. கால்நடைகளின் மேய்ச்சலாலும், மூலிகைத்தாவரம் என்பதால் இவற்றை மொத்தமாக எடுத்துச் செல்வதாலும் இவை அழிவின் விளிம்புக்குச் சென்றன. பத்தாண்டுகள் கழித்து மதுரை அழகர்மலையில் இப்பூக்கள் பூத்ததை ஆவணப்படுத்தியுள்ளோம் என்கிறார் தாவர, விலங்கு ஆராய்ச்சியாளர் கிஷோர். அவர் கூறியதாவது: வெள்ளைநிற 'பிளெய்டெயின் ஆர்கிட்' நிலத்தில் பூக்கக்கூடிய ஒரு வகை இனம். செப்டம்பரில் நீள்வட்ட கிழங்கில் இருந்து முளைத்து 30 செ.மீ., வரை வளர்கின்றன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை மொத்தமாக மலர்கின்றன. இவை மலைச்சரிவில் வளரும் உயர்ந்த மரங்களின் நிழலில் அடிநிலைத் தாவரமாக வளரும். பாரம்பரிய மருத்துவத்தில் இத்தாவரம் சளி, ஆஸ்துமா, காசநோய், விஷக்கடி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு வகையான 'செக்கர்டு வன்டா ஆர்கிட்' இந்தியா, இந்தோ-சீனா பகுதியில் காணப்படும். பெரிய மரங்களின் பட்டையில் ஒட்டுண்ணியைப் போல பற்றி வளரக்கூடிய இனம். மலைச்சரிவுகளில் காணப்படும் பெருமரங்கள் மரக்கட்டைக்காக வெட்டப்படுவதால் இவை வாழ்விட அழிவுக்கு உள்ளாகின்றன. மே யில் அழகர்மலையில் பூத்ததை ஆவணப்படுத்தியுள்ளோம். இவற்றின் பூக்கள் அழகாக இருப்பதால் அலங்கார நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தட்பவெப்பம், மண்ணின் தன்மைக்கேற்ப வளரும் இதுபோன்ற தாவரங்களை வேறிடத்தில் உற்பத்தி செய்ய இயலாது. வனத்துறையினர் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அழிவின் விளிம்பில் இருந்து 'ஆர்கிட்' வகை தாவரங்களை மீட்க வேண்டும் என்றார்.