கூவி கூவி அழைத்தும் போணி ஆகாமல் பழனிசாமி விரக்தி அய்யப்பன் எம்.எல்.ஏ., விமர்சனம்
திருமங்கலம்: ''த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளைக் 'கூவி கூவி' கூட்டணிக்கு அழைத்தும் போணி ஆகாததால், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி விரக்தியில் உள்ளார். பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் உள்பட அனைவரும் ஒன்று கூடி தேரை இழுத்தால் மாபெரும் வெற்றி பெறும்'' என உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தெரிவித்தார். திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் கூறியதாவது: தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் புதிதாக யாரும் சேரவில்லை. த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரும் என நினைத்து, பழனிசாமி அவர்களை கூவி கூவி அழைத்தார். ஆனால் போணியாகவில்லை. அதனால் தோல்வி பயத்தில் விரக்தியில் பழனிசாமி உள்ளார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா, செங்கோட்டையன் என அனைவரும் ஒன்று சேர்ந்து போட் டியிட்டால் தேர்தல் வெற்றி பிரகாசமாக இருக்கும். அனைவரும் ஒன்று கூடி தேரை இழுத்தால்தான் தேர் நகரும். செங்கோட்டையன் மாற்றுக் கட்சிக்கு சென்றாலும் அனைவரும் ஒன்றிணையும்போது அவரும் எங்களுடன் ஒன்று சேர்வார் என்றார்.