| ADDED : ஜன 29, 2024 06:06 AM
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் சீரமைப்புப்பணி ரூ.5.5 கோடி செலவில் விரைவில் துவங்கவுள்ளது.இது குறித்து துணைக்கமிஷனர் ராமசாமி கூறியதாவது: மாசி பவுர்ணமியில் பொய்கைக்கரைப்பட்டி தெப்பத் திருவிழாவுக்காக கள்ளழகர் வருவது வழக்கம். தற்போது இப்பகுதியில் உள்ள பெரிய பொய்கைக் குளம் இதுவே. அழகர்கோவிலில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.இது600 க்கு 600 அடி நீள, அகலத்துடன், 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது.நான்கு புறமும் அழகான கருங்கற்களால் ஆன சுற்றுச் சுவர்கள், கல் படிக்கட்டுகளை கொண்டது. இதன் மையத்தில் உள்ள மண்டபமானது 25 அடி நீளம் 25 அடி அகலம் கொண்டது. இதன் உயரம் 32 அடி. இதன் மேல் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கோபுரம் ஒன்று அமைந்துள்ளது.மாசி மாதம் பவுர்ணமி அன்று கள்ளழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத்தில் காலை, மாலை எழுந்தருள்கிறார். இந்தக் குளத்திற்கு அழகர் மலையில் பெய்யும் மழை நீர், நுாபுர கங்கை எனப்படும் சிலம்பு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி, கோயில் கோட்டைக்குள் அமைந்துள்ள ஆறாமத்துக் குளம் நிரம்பும். அதிலிருந்து வழிந்து செல்லும் நீர் பொய்கைக்கரைப் பட்டி தெப்பக்குளத்தை நிரப்புகிறது.இக்குளம் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருப்பதால், தடுப்புச் சுவர்கள், மையமண்டப பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க ஆய்வுகள் நடந்தது. இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முதற்கட்ட பணிக்காக நிதி ஒதுக்கி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.தமிழக அரசு தற்போது இந்த குளத்தை சீரமைக்க முதற்கட்டமாக ரூ. 5.5 கோடியில் பணியை தொடங்கவுள்ளது. பக்தர்களின் நீண்டகால கோரிக்கையான மைய மண்டபத்தில் கள்ளழகரை வைத்து தரிசனம் செய்யும் நிகழ்வு நடக்க உள்ளது, என்றார்.