ரூ.ஒரு கோடி செலவிட்டும் பயன்படாத ஊருணி; புதர் மண்டியதால் விஷப்பூச்சிகள் உலா
மேலுார்: மேலுாரில் ரூ. ஒரு கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஊருணி சிதிலம் அடைந்து வருவதால், நகராட்சி நிர்வாகம் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலுார் நகராட்சி அலுவலகம் எதிரே சாலக்கிரையான் ஊருணி அமைந்துள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த ஊருணி, பெரியார் பாசன கால்வாய் மூலம் நிரம்பும். கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 99.30 லட்சத்தில் ஊருணியை மேம்படுத்தினர். நடைபாதை, கம்பி வேலி, உள்பகுதியில் சிலாப் கற்கள் பதித்து கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்தனர். அன்று முதல் இதுவரை மக்கள் பயன்படுத்தாத நிலையில் சிதிலமடைந்து வருகிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: தரமற்ற முறையில் கட்டியதால் சிலாப் கற்கள், கான்கிரீட் தடுப்புச் சுவர் உடைந்து விட்டது. நடைபாதை முழுவதும் புதர் மண்டியுள்ளது. விஷப் பூச்சிகள் குடியிருப்புக்குள் புகுவதால் மக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர். ஊருணியில் தண்ணீர் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதுவரை தண்ணீர் தேக்கவில்லை. மேலுார் மக்களுக்கு அடிப்படை தேவை பல இருக்கும் போது, தரமற்ற முறையில் ஊருணியை மேம்படுத்தி ரூ. 99.30 லட்சம் மக்கள் வரிப்பணம் வீணாவதால் நகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''ஊருணி 2 ஆண்டுகளாக செயல்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் பழுது பார்க்கப்படும். நடைபாதை உயரமாக இருப்பதால் மக்கள் பயன்படுத்தாமல், புதர் மண்டி கிடக்கிறது என்றார்.