அறுபது நாட்களில் குற்றப்பத்திரிகை போலீஸ் கமிஷனர் தகவல்
மதுரை : ''மதுரையில் போக்சோ, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் அறுபது நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மதுரை நகரில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குற்றம், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்துள்ளன. இதற்கு போலீசார் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். குறிப்பாக கொலை மிரட்டலை தடுக்க, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் வாரம் 5 நாட்கள் சம்பந்தப்பட்ட புகார்தாரர், அவருக்கு எதிரானவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.வார கடைசி நாளில் ஆய்வாளர்கள் மூலம் அறிக்கை பெறுகிறோம். இதன் மூலம் முன்விரோத கொலை, அடிதடி பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. போக்சோ, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றவழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.இருப்பினும் தற்போது அடிதடி வழக்குகளிலும் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய சம்பவமும் பெரிய குற்றச்செயலாக மாறுவது தடுக்கப்படுகிறது. மதுரை நகரில் கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குட்கா, புகையிலை விற்ற 175 கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணிவது அவசியம் என அறிவுறுத்தி வருகிறோம். முக்கிய சாலைகளில் இருந்ததேவையற்ற 243 சிறிய பாதைகள் மூடப்பட்டுள்ளன. நிலுவையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒன்றரை ஆண்டில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தொடர் நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம்.நகரில்14 ஆயிரத்துக்கும் மேற்பட் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறோம். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வணிகர்கள், குடியிருப்போரை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.