போலீஸ் செய்திகள்...
வாலிபர் இறப்பு: இருவர் கைது கள்ளிக்குடி: திருமாலை சேர்ந்த கட்டடத் தொழிலாளி திருமுருகன் என்ற சூர்யா 25, திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இருபது நாட்களுக்கு முன் இரவு நேரம் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பானுமதி புகாரில் கூடக்கோவில் போலீசார் விசாரித்தனர். அவர் மாயமான 2 நாட்களுக்கு பின்னர் டி. புதுப்பட்டி அருகே திருமுருகனின் டூவீலர் எரிந்த நிலையில் கிடந்தது. போலீசார் தேடிய போது பாழடைந்த கிணறில் அவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிந்தது. விசாரணையில் வாலிபால் விளையாட்டு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் முன் விரோதம் இருந்துள்ளது. இதில் டி. புதுப்பட்டி பாலமுருகன் 21, திருமாலை சேர்ந்த சரவணன் 22, ஆகியோரை பிடித்து விசாரித்ததில், சம்பவத்தன்று தனியாக வந்த திருமுருகனை சரவணன் உள்பட 7 பேர் விரட்டிச் சென்றதும், அவர் வண்டியை போட்டுவிட்டு ஓடும்போது பாழடைந்த கிணற்றில் விழுந்து பலியானதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் மரணம் எழுமலை : இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மலைச்சாமி 58. தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர். கடந்த 1997 ல் போலீசில் சேர்ந்தவர். அலங்காநல்லூரில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தவர், கடந்த மேயில் எழுமலைக்கு மாறுதலாகி வந்தார். செப். 6 ல், பணியில் இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது மேலுார் : கொடுக்கம்பட்டி பிரியா 24, மூன்று நாட்களுக்கு முன் இரவு வீட்டில் துாங்கிய போது வீட்டின் பின்பக்க சுவரில் சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்தார். அங்கு யாரோ பெட்ரோல் குண்டை சுவரில் வீசியது தெரிய வந்தது. கீழவளவு எஸ்.ஐ., அசோக்குமார் அதே பகுதி சிறுவர்கள் இருவரை பிடித்து விசாரித்தார். மது போதையில் சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்து அவர்களை கைது செய்தார். கொலை மிரட்டல் 4 பேரிடம் விசாரணை கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வைரவன் 45, இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோபாலுக்கும் இடம் சம்பந்தமான முன்விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் வைரவன் கொட்டகை போடுவதற்காக இடத்தை அளவீடு செய்த போது கோபால், அவரது உறவினர்கள் நால்வர் தகாத வார்த்தையால் பேசி கடப்பாறையால் வைரவன், அவரது அம்மா மீனாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயம் பட்ட இருவரும் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கொட்டாம்பட்டி போலீசார் தெய்வேந்திரன் நால்வரிடமும் விசாரிக்கிறார். கிணற்றில் விழுந்து முதியவர் பலி திருமங்கலம்: கூடக்கோவில் அருகே எலியார்பத்தியை சேர்ந்தவர் கன்னையா 70, ஆடு மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்கச் சென்ற போது அருகில் இருந்த கிணற்றில் ஆடுகள் விழாமல் இருக்க அவற்றை விரட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். திருமங்கலம்: கருவேலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கண்ணன் 34, வாத்து வளர்க்கும் வேலை செய்து வந்தார். நேற்று மாலை 4:00 மணிக்கு வாத்துகளுக்கு தீவனம் வாங்கிக் கொண்டு, கப்பலுார் மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் சென்றார். அவருக்குப் பின்னால் வந்த ஒரு கார் கண்ணன் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். 310 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை: ரயில்வே ஸ்டேனுஷனுக்கு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வந்த மேற்கு வங்க மாநிலம் புருலியா - திருநெல்வேலி ரயிலின் பொதுப் பெட்டியில், கேட்பாரற்றுக் கிடந்த பையை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அதில் இருந்த 310 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடக்கிறது.