| ADDED : டிச 27, 2025 06:11 AM
ஆடுகள் மர்மச் சாவு திருமங்கலம்: ஆலம்பட்டியைச் சேர்ந்த ராமு 58, அழகுராஜா 55, மணிகண்டன் 28, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்க் கின்றனர். ஆடு மேய்ச்சலுக்கும் செல்வர். தினமும் மேய்ச்சலுக்காக திரளி, புதுப்பட்டி கிராமப் பகுதிகளுக்கு ஆடுகளை அழைத்துச் செல்வர். நேற்றும் அழைத்துச் சென்ற போது, ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தன. இதுபற்றி மணிகண்டன் கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் பரிசோதித்த போது காட்டு பன்றிகள் விவசாய நிலத்தை சேதம் செய்யாமல் இருக்க வைக்கப்பட்ட பருத்தி குருணை மருந்தை ஆடுகள் உண்டது தெரிந்தது. உடனே ஆடுகளுக்கு மாற்று மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஆடுகள் பல பிழைத்துக் கொண்டாலும், 5 ஆடுகள் மட்டும் பலியாகின. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். வெடியால் வாய் சிதறிய பசு வாடிப்பட்டி: செமினிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் 58, விவசாயி. சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது சினை மாடு ஒன்று நேற்று காலை வழக்கம் போல் சிறுமலை அடிவார தரிசு நிலத்தில் மேய்ந்தது. அங்கு காட்டுப்பன்றிக்காக கொய்யாப் பழத்தில் வெடி வைத்து சென்றுள்ளனர். அந்த கொய்யா பழத்தை சாப்பிட முயன்ற போது வெடி வெடித்து சிதறியது. இதில் மாட்டின் வாய் பகுதி நாக்கு, பற்கள் தாடை சிதறி உயிருக்கு போராடியது. போலீசார் விசாரிக்கின்றனர்.