போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய் யனார் கோயில் உள்ளது. இதில் கிராமத்திற்கு பல்வேறு விதத்தில் தானங்கள் வழங்கியவர்களின் வாரிசுதாரர்களை முதன்மைக்காரர்களாக முன்னிறுத்தி மரியாதை செய்வது வழக்கம். கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்புகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக போஸ்டர் அடித்து ஒட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 8:00 மணிக்கு வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் வளர்மதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்தனர்.