உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிர் காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆதரவு தராத தமிழக அரசு பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

பயிர் காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆதரவு தராத தமிழக அரசு பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

மதுரை : பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படாததால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் பங்குதாரராக மாறி விட்டதோ என விவசாயிகள் சந்தேகிப்பதாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. கடந்தாண்டு சம்பா, தாளடி பருவ நெல் அறுவடை காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை ஏழு முறை ஆய்வு செய்த அதிகாரிகள் பாதிப்பை மட்டும் கணக்கிட்டனர். அதற்கான அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்ட நிலையில் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை காப்பீட்டுத் தொகைக்காக மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டுத்திட்டத்தில் பங்குத்தொகை செலுத்துகின்றன. பிரதமரின் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து மத்திய அரசு பட்டியலிட்டு அனுப்பும். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்து அனுமதி கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது. அதாவது எந்த நிறுவனம் வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்யும். மத்திய அரசின் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தை செயல்படுத்த விரும்பாத மாநில அரசு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துகிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அரசியல்வாதிகளுக்கு பயன் இருக்கும். விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மத்திய அரசின் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு மட்டுமே பயன் கிடைக்கும். விவசாயிகள் பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. விவசாயத்தில் தனிநபர் காப்பீட்டுத்தொகையை ஏற்கவும் மறுக்கின்றனர். காப்பீட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு பங்குதாரராக மாறி விட்டதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை