முல்லைப் பெரியாறு அணைக்கு 3வது குழு அவசர மேல்முறையீடு செய்யாதது ஏன் தமிழக அரசிற்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி
மதுரை: முல்லைப்பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் 3வது குழுவை நியமித்துள்ள நிலையில், தமிழக அரசு அவசர மேல்முறையீடு செய்யாதது ஏன் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பினார். மதுரையில் நடந்த தென் மண்டல நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் பாண்டியன் கூறியதாவது: ஏற்கனவே உச்சநீதிமன்றம் நியமித்த இரண்டு குழுக்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறது. அணைகள் பாதுகாப்பு மசோதாவின் கீழ் நீர்ப்பாசனக்குழுத் தலைவர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து அறிக்கை தருகிறது. அணை வலுவிழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு தொடர்ந்த வழக்கிற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அணையின் பலம் குறித்து கேரள அரசின் துாண்டுதலின் பேரில் தனியார் அமைப்பு மூலம் பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அணையின் பலத்தை ஆய்வு செய்ய மூன்றாவது குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது தமிழக நலனுக்கு எதிரானது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசு அவசர மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முல்லைப்பெரியாறு அணை மீதான தமிழக அரசின் உரிமைகள் பறிபோய் விடும். தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப் படும். பறிபோகும் உரிமைகள் அ.தி.மு.க., ஆட்சியின் போது 142 அடி வரை முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு எல்லா பாசனப்பகுதிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. ரூல்கர்வ் முறையை அனுமதிக்க முடியாதென அ.தி.மு.க., தெரிவித்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் உச்சநீதிமன்றம் 'ரூல்கர்வ்' முறையை அனுமதித்து, பேரிடர் காலங்களில் இருமாநில அரசுகளும் கலந்து பேசி அமல்படுத்தலாம் என தீர்ப்பளித்தது. ஆனாலும் சராசரி மழையின் போதே 'ரூல்கர்வ்' முறையை பின்பற்றி 136 அடிக்கு மேல் தண்ணீரை வெளியேற்றி வருகிறது கேரளா. தமிழகம் போராடி பெற்ற உரிமையை தி.மு.க., பறிகொடுத்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அணை மேல் அணை வைகை அணையில் 30 சதவீத அளவு மண் தேங்கியுள்ளதால் நீரின் 30 சதவீத கொள்ளளவை இழந்துள்ளோம். வைகை அணைக்கு மேல் வருஷநாடு பகுதியில் புதிய அணை கட்டி உபரிநீர், கடலில் கலப்பதை தடுத்து தேக்கி வைகை அணை மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தி தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.