பல்கலையில் 2வது நாளாக பேராசிரியர்கள் போராட்டம்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பதவி உயர்வு வழங்க கோரி துவங்கிய பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்தது. 'மூபா' தலைவர் முனியாண்டி தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதிவாளர் அறைமுன் நேற்றுமுன்தினம் இரவு தங்கினர். நேற்று காலை பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், பேராசிரியர்களை பணிக்கு திரும்ப கேட்டு கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதையடுத்து வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார். வெளியேறவில்லை. இதையடுத்து நாகமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க பதிவாளர் சென்றார். போலீசார், எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். பதிவாளர் தரப்பில் எஸ்.பி., அரவிந்த் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பல்கலை சென்று பதிவாளர் ராமகிருஷ்ணனிடம் பேச்சு நடத்தினார். முனியாண்டி கூறுகையில், 2022 ல் பதவி உயர்வுக்கான விண்ணப்பம் பெற்று 2024 வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து பதிவாளர், கன்வீனரிடம் விபரம் கேட்டுள்ளார். தாமதம் ஆனதால் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் யார் கிடப்பில் போட்டது என்பது குறித்து கன்வீனர் விசாரணை நடத்த வேண்டும். பதவி உயர்வு உத்தரவு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.