பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழை நீர்
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகள் நடப்பதால் தற்காலிகமாக தேனி ரோட்டில் அரசினர் குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது.அரசினர் குடியிருப்பு கட்டடங்கள் கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் குடியிருக்க தகுதியில்லாத கட்டடங்களாக அறிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்காக ரோடு அமைத்துள்ளனர். ரோடு அமைக்கும் போது குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால்களையும் மூடிவிட்டனர்.இதனால், மழை பெய்தால் தேங்கும் நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாத கட்டடங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்குவதால் கட்டடங்கள் இடிந்து விழும்சூழல் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கிய தண்ணீர் துர்நாற்றமும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது. பழைய வடிகால்களை சரிசெய்து, தண்ணீர் தேங்காமல் வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.