உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் கருவறைக்குள் தேங்குது மழைநீர்

கோயில் கருவறைக்குள் தேங்குது மழைநீர்

வாடிப்பட்டி: பழமையான வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் மழை நீர் கசிந்து கருவறையில் தேங்குவதால் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை பொறுப்பில், பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் குலசேகர பாண்டிய மன்னர் குழந்தை பருவத்தில் வழிபாடு செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இங்கு மட்டுமே மோட்ச தீபம் உள்ளது. ஆடி மாதம் திருக்கல்யாணம், அழகர்கோயில் பள்ளியறை பூஜைக்கு மாலை வழங்குவது வழக்கம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வழிபாடு விசேஷம். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மேடானதால் தாழ்வான கோயிலுக்குள் செல்லும் மழைநீர், 2 அடிக்கு மேல் நாள் கணக்காக தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால் பக்தர்கள் வழிபட சிரமப்படுகின்றனர். இக்கோயிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். அர்ச்சகர் நாராயணன் கூறுகையில், ''கோயில் வளாகம், கருவறை வரை மழை நீர் தேங்குகிறது. சுண்ணாம்புக் காரை கட்டடம் என்பதால் வலுவிழந்து அனைத்து இடங்களிலும் மழை நீர் கசிகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் கிராம மரியாதைக்காரர்கள் மூலம் கும்பாபிஷேக பணிகளை துவங்குவோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி