குடிநீர் குழாய்கள் முறையாக பதித்து ரோடுகளை உடனே சீரமையுங்கள் * ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உத்தரவு
மதுரை: 'மதுரையில் குடிநீருக்காக குழாய் பதிக்க தோண்டப்படும் ரோடுகளை உடனே சீரமைக்க வேண்டும்' என மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டார்.மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1653 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழாய் பதித்தல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் ஐந்து கட்டங்களாக நடக்கின்றன. மொத்தம் 2,59,208 வீட்டு இணைப்புகளில் 1,04,611 இணைப்புகள் தற்போது வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. மீதமுள்ள இணைப்புகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.இத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வில் அமைச்சர் பேசுகையில், திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய்களை முறையாக பதித்து, ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். விடுபடாமல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேல்நிலை தொட்டிகளில் குடிநீரை ஏற்றி முறையாக வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, சேகர், நகர்நல அலுவலர் இந்திரா, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள் ரங்கநாதன், பாலமுருகன், சுப்பிரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் பாலகுருநாதன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.