உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணிப்பு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தகவல்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணிப்பு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தகவல்

மதுரை: தமிழகத்தில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்டத்தை செப்.,25 முதல் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அதன் ஒருங்கிணைப்பாளர் முருகையன் கூறியதாவது: 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்டத்தால் பல்வேறு துயரங்களை வருவாய்த்துறையினர் அனுபவிக்கின்றனர். இத்திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இரவு, பகலாக வருவாய்த்துறை அலுவலர்கள் பணி செய்ய மாநில, மாவட்ட நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன. செப்., 25 முதல் அத்திட்டத்தை 40 ஆயிரம் வருவாய்த்துறையினர் புறக்கணிப்பு செய்கிறோம். அரசின் திட்டங்களுக்கு போதிய அளவு கால அவகாசம் வழங்க வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி செப்., 25 ல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். சனிக்கிழமைகளில் அரசின் ஆய்வு மற்றும் திட்டப் பணியை செய்ய நிர்பந்திக்கக் கூடாது; காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரையிலான நேரம் தவிர மற்ற நேரங்களில் பணி செய்ய வற்புறுத்தக் கூடாது.வருவாய்த் துறையினருக்கான பணி பாதுகாப்பு சட்டம், கருணை அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 45 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. சில கலெக்டர்கள் 20 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளை நிர்பந்திக்கின்றனர். கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் வருவாய்த் துறையினருடன் பேசி தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் அறிவித்த நாள் முதல் இதிலுள்ள நடைமுறை பிரச்னைகளை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசும், வருவாய்த்துறை அமைச்சரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் தங்களுடைய மாவட்டம் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கலெக்டரும் மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிடுகிறார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நள்ளிரவு வரை ஆகிறது. மனுக்களை பதிவேற்றம் செய்தால் தான் ஊழியர் வீட்டிற்கு செல்லக்கூடிய நிலை. நாள்தோறும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடத்துவதால் வருவாய்த்துறையின் பிற பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை நெறிப்படுத்த வேண்டுமெனக் கூறி ஒன்றரை மாதங்களாக காத்திருந்தோம். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி முகாம்களை புறக்கணிக்கிறோம். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தேர்தலுக்கு முன்னதாக கடைசி 6 மாதத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. 10 ஆயிரம் முகாம்களை 6 மாதங்களுக்குள் நடத்த முடியாது. இவ்வாறு தெரிவித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ