அஜித் படத்துக்கு ரூ.500 கட்டணம் தியேட்டர்களுக்கு நெருக்கடி
மதுரை: மதுரையில் நாளை (ஏப்., 10) நடிகர் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படம் 30 தியேட்டர்களில் வெளியாகிறது.மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ.190 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனி தியேட்டர்களில் முதல் ஷோவுக்கு ரூ.500 வசூலிக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்த உச்ச வரம்பை மீறிய கட்டணம் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ.190-க்குள் இருக்கிறது. ஆனால் தனி தியேட்டர்களில் கட்டணம் அதிகம் வசூலிக்க நெருக்கடி கொடுக்கின்றனர். இதை ஏற்காத தியேட்டர்களில் முதல் ஷோ திரையிட இன்னும் அனுமதி வழங்கவில்லை. நாங்கள் ரூ. 500 கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் ரசிகர்கள் ரூ. 190 கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவர். இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க ஒரே வகையான கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.