ஆர்.டி.ஓ., அலுவலக சர்வர் கோளாறு பதிவுச் சான்று வழங்குவதில் தாமதம்
மதுரை: மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) 'சர்வர்' பிரச்னையால், வாகன பதிவு சான்று வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் பலநுாறு பேர் வந்து செல்கின்றனர். மதுரையில் வடக்கு, தெற்கு, மத்தி அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் குறைந்தது 60 முதல் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவுக்காக வருகின்றன. இவற்றை வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்து பதிவு செய்து, பதிவெண் வழங்குவர்.ஆய்வாளர் வாகனத்தை பதிவு செய்தபின், ஒரு வாரத்திற்குள் வாகன பதிவுச்சான்று தபாலில் வாகன உரிமையாளர் முகவரிக்கு அனுப்பப்படும். இச்சான்றை சென்னை தனியார் நிறுவனம் ஒன்று தயார் செய்து அனுப்புகிறது.இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக 'சர்வரில்' கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாகன பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மதுரை வடக்கு ஆர்.டி.ஓ.,. சித்ரா கூறுகையில், ''இப்பிரச்னை அனைத்து அலுவலகங்களிலும் உள்ளது. சொந்த வாகனங்களாக பதிவாகும் இலகுரக வாகனம், டூவீலர்களுக்கே இப்பிரச்னை உள்ளது. டிரான்ஸ்போர்ட் வாகனம், கனரக வாகனங்கள் பதிவில் இப்பிரச்னை எழவில்லை. அவர்களுக்கு சான்று வழங்குவதில்தான் தாமதம் ஏற்படுகிறது. ஓரிரு நாளில் இப்பிரச்னை தீர்வுக்கு வரும்'' என்றார்.