சாமநத்தம் கண்மாயில் சரணாலயம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: மதுரை சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தடையில்லாச்சான்று பெறப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு:சாமநத்தம் கண்மாய் 550 ஏக்கர் பரப்பில் உள்ளது. அரிய வகை மரங்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சி இனங்கள், பறவைகள் உள்ளன. சுற்றுச்சூழலின் முக்கிய அம்சமான பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கிறது. குளிர்காலங்களில் தொலைதுாரங்களிலிருந்து பறவைகள் வருகின்றன. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக்கோரி தமிழக வனத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர்: சரணாலயம் அமைக்க நீர்வளத்துறை, சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் தடையில்லாச்சான்று பெறப்பட்டுள்ளது. அது மேல்நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள்: 6 மாதங்களில் முன்னேற்றம் ஏற்படாவிடில் மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.