இரண்டாவது நாளாக பள்ளி புறக்கணிப்பு
வாடிப்பட்டி : பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டுநாயக்கர் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மாணவர்களின் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.இங்குள்ள ஊராட்சி துவக்க மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றதால் வகுப்பறைகள் வெறிச்சோடின. போராட்ட பந்தல் முன் வேட்டைத் தொழிலுக்கு பயன்படுத்தும் எலி பிடிக்கும் கூண்டுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மாணவர்கள் போட்டிகளில் பெற்ற பரிசு கோப்பைகளை வைத்திருந்தனர்.தங்களுக்கான காட்டுநாயக்கர் ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தில் பங்கேற்போம் என மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். 'எங்களை மீண்டும் பழைய காட்டு வாழ்க்கைக்கு சென்றுவிடாமல் தவிர்க்க, சான்றிதழ் வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர்.