கடை ஒதுக்கீடு வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் அருகே 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இக்கடைகளை ஒதுக்கீடு பெற்ற குத்தகை உரிமைதாரர்கள் நடத்தாமல், நிபந்தனைகளை மீறி பிறருக்கு உள்வாடகைக்கு அனுமதித்துள்ளனர். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. குத்தகை காலத்தை மறுவரையறை செய்து, நிபந்தனைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு,'மனுதாரர் கடை ஒதுக்கீடு எதுவும் பெறவில்லை. தகுதியானவர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலை மனுதாரர் நிரூபிக்கவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.