| ADDED : நவ 15, 2025 05:01 AM
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் செங்குன்றம் விரிவாக்கப் பகுதி 4 வார்டுகள் சந்திக்கும் பகுதியாக இருப்பதால் ஏற்பட்ட தெருக்கள் குழப்பத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான படிவங்கள் வழங்குவது தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி அருகே வயல்வெளி பகுதி வீட்டுமனைகளாக மாறி வருகிறது. இங்கு மாநகராட்சியின் 92, 93, 98, 99 ஆகிய வார்டுகள் இணைகின்றன. பசுமலை, பெராக்காநகர் முதல் செங்குன்றம் பகுதிவரை வார்டு 93ம், வில்லாபுரம், ஹவுசிங்போர்டு முதல் இங்குள்ள கோல்டன்சிட்டி, மீனாட்சி நகர் வரை வார்டு 92ம், திருப்பரங்குன்றம் கோயில், மேட்டுத்தெரு, பொறியியற் கல்லுாரி, ஓம்முருகா நகர், வி.ஐ.பி., சிட்டி வரையான பகுதி வார்டு 98 ஆகவும், செங்குன்றம் அனைத்து தெருக்களும் வார்டு 99 லும் உள்ளன. இப்பகுதியில் பலர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இங்கு புதிதாக குடிவருவோர் பலரும் தங்கள் ஆவணங்களை இப்பகுதிக்கு மாற்றும்போது செங்குன்றம் அல்லது அங்குள்ள ஏதோ ஒரு பகுதியை குறிப்பிட்டு வந்துவிடுகின்றனர். தற்போது இவர்களுக்கு தாங்கள் எந்த வார்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கும் இப்பகுதி எந்த வார்டில் உள்ளது என்று கண்டறிவதிலும் குழப்பமாக உள்ளது. இதனால் திருத்தப்படிவங்கள் வழங்கத்துவங்கி 10 நாட்களாகியும் இப்பகுதிக்கு இதுவரை படிவங்கள் வினியோகிக்கப்படவில்லை. பா.ஜ., ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''இங்குள்ளோருக்கும், தேர்தல் ஊழியர்களுக்குமே வார்டுகள் குறித்த குழப்பம் உள்ளது. தெருக்களில் பெயர் பலகைகளும் முறையாக இல்லை. திருத்தப்படிவங்கள் வராததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. படிவங்களை விரைந்து வழங்க வேண்டும்'' என்றார்.