உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நள்ளிரவு வரை எஸ்.ஐ.ஆர்., ஆய்வுக்கூட்டம்;  என்ன சார் இது மனஉளைச்சலில் உள்ளாட்சி பணியாளர்கள்

நள்ளிரவு வரை எஸ்.ஐ.ஆர்., ஆய்வுக்கூட்டம்;  என்ன சார் இது மனஉளைச்சலில் உள்ளாட்சி பணியாளர்கள்

மதுரை: மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.,) பணிகள் என்ற பெயரில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நள்ளிரவு வரை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதால் மன உளைச்சலிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். நவ.,4 முதல் டிச.,4 வரை எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் ஏற்கனவே அரசு பணியில் உள்ளவர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 300 பேர் வீதம் இப்பணியை கவனிக்கின்றனர். எஸ்.ஐ.ஆர்., பணியில் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் இத்தொகுதிக்கான கண்காணிப்பாளர்கள், பி.எல்.ஓ.,க்களுக்கு திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இரவு 12:00 மணியில் இருந்து அதிகாலை 2:30 மணி வரை பதிவேற்றப் பணிகளை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். இதனால் பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒன்னுமே புரியலைங்க அவர்கள் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணியின் முழு விவரம் பி.எல்.ஓ.,க்களுக்கே சரியாக புரியவில்லை. ஒவ்வொரு சில மணி நேரத்திற்கும் 'அப்டேஷன்'களை கூறி திருத்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிறைவு செய்வதில் படுகுழப்பம் ஏற்படுகிறது. நேற்றுமுன்தினம் திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பி.எல்.ஓ.,க்கள் சார்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதன் எதிரொலியாக நேற்று இரவு மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரியில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து 'ஆப்'களில் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பணிகள் துவங்கி 10 நாட்களான நிலையில் புதிய புதிய 'அப்டேட்'களால் இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டால் எப்போது ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிப்பது என தெரியவில்லை. மாநகராட்சி பொறியாளர்களுக்கு ரோடு, குடிநீர், பாதாளச்சாக்கடை பணிகள், தற்போது உலக ஹாக்கி போட்டிகள் நடப்பதால் ரோடு பராமரிப்பு குடிநீர் உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் எஸ்.ஐ.ஆர்., பணிகளிலும் மல்லுக்கட்டுவது பெரும் மனஉளைச்சலை ஏற் படுத்துகிறது என்றனர்.

சர்ச்சையாகும் 'டிரான்ஸ்பர்'கள்

மாநகராட்சி பகுதியில் வார்டு பொறியாளர்கள், துப்புரவு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவர்களை பழைய வார்டுகளுக்கு சென்று எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர். இதுபோல் மாவட்ட பகுதியில் 34 துணை பி.டி.ஓ.,க்கள், 17 ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களிடம் மாற்றப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்.ஐ.ஆர்., பணிகளை உடன் முடித்துக்கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். எஸ்.ஐ.ஆர்., பணிகளே சவலாக உள்ள நிலையில் மாநகராட்சியிலும், மாவட்ட பகுதியிலும் அலுவலர்களை 'டிரான்ஸ்பர்' என்ற பெயரில் துாக்கியடிப்பது எஸ்.ஐ.ஆர்., பணிகள் பாதிப்பதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எனவே எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடியும் வரை டிரான்ஸ்பர் நடவடிக்கைக்கு கலெக்டர் பிரவீன்குமார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை