சிவகங்கை போலீஸ்காரர் மதுரையில் எரித்துக்கொலையா? மனைவியும் இறந்ததால் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
மதுரை : மதுரையில் விபத்தில் மனைவி இறந்த நிலையில் கணவரான போலீஸ்காரர் மலையரசனும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இருவர் இறப்பிலும் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன் 36. இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி 33. இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பினார். மானாமதுரை கட்டனுார் பிரிவில் வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி காயமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இறந்தார். விடுமுறையில் இருந்த மலையரசன், நேற்று முன்தினம் டூவீலரில் மதுரை வந்தார். மனைவி சிகிச்சை பெற்ற சிந்தாமணி பகுதி மருத்துவமனைக்கு சென்று சில ஆவணங்களை கேட்டு புறப்பட்டவர் மாயமானார். அலைபேசி கண்டெடுப்பு
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். தனிப்படை காவலரான அவர் சிறந்த பணிக்காக பாராட்டு சான்று பெற்றவர். மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். மலையரசன் சென்று வந்த இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். மனைவி சிகிச்சை பெற்ற மருத்துவமனை அருகே ரோட்டோரம் மலையரசனின் அலைபேசி கண்டெடுக்கப்பட்டது. அதையும், அவர் டூவீலர் 'பார்க்கிங்' செய்திருந்த மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மலையரசன், மனைவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் நேற்று மதியம் மதுரை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து மலையரசன் உடலை பெற்றனர். தனிப்படை காவலரான மலையரசன் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது திட்டமிட்டு சதி செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.