எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் சாதனை
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் 65 வயது குடியரசு தினவிழா மாநில அளவிலான 17 வயது பிரிவினருக்கான போட்டிகள் மதுரையில் நடந்தன. வாலிபால் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) மதுரை விளையாட்டு விடுதி மாணவர்கள் 3 - 2 செட் கணக்கில் துாத்துக்குடி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.ஆடவர் கூடைப்பந்து இறுதிப் போட்டியில் தேனி எஸ்.டி.ஏ.டி., அணியுடன் மோதிய மதுரை எஸ்.டி.ஏ.டி. அணியினர் 45 - 60 என்ற புள்ளிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். கூடைப்பந்து விளையாட்டு மாணவர் யாதேஷ்குமார் அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இளையோர் தேசியப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதையும் வென்றார்.வெற்றி பெற்ற வாலிபால், கூடைப்பந்து விளையாட்டு மாணவர்கள் அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இவர்களை ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் முருகன், வாலிபால், கூடைப்பந்து பயிற்சியாளர்கள் ஆனந்த்பாபு, பிரபு, தலைமையாசிரியை தீபா, உடற்கல்வி இயக்குநர் ஷாம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜஸ்டின், ஜெபா ஆகியோர் பாராட்டினர்.