இயந்திர நாற்றுக்கு மானியம் மதுரையில் முதன்முறை
மதுரை: வேளாண் துறையின் கீழ் 'டிரான்ஸ்பிளான்டர்' நாற்று நடும் இயந்திரம்மூலம் நெல் நாற்றுகளை நடுவதற்கு மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு முதன்முறையாக மானியம் வழங்கப்படுகிறது.வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: நெல் உற்பத்தியை இயந்திரமயமாக்கும் வகையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயந்திரம் கொண்டு நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்புள்ள பகுதிகளில் 2000 விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கருக்கான மானியம் வழங்கப்படும். மேலும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நெல் விதைப்பண்ணை அமைத்து சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.8 வீதம் ஊக்கத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. 95 டன் விதைகளை பெறும் வரை மானியம் வழங்கப்படும். 24.23 டன் எம்.என். மிக்சர் உரம் வழங்குவதற்கும் மானியம் உள்ளது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.