இதையும் கவனிங்க: கட்டடங்களை கட்டியவர்கள் ஊழியர்களை நியமிக்கல: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நெருக்கடி
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும் புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறதே தவிர அவற்றை பராமரிப்பதற்கான ஊழியர்களை நியமனம் மட்டும் செய்யாததால் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.டீன் அருள் சுந்தரேஷ்குமார் கட்டுப்பாட்டில் மதுரை அரசு மருத்துவமனை, தீவிர விபத்து பிரிவு, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, பாலரெங்கபுரம் மண்டல புற்றுநோய் மையம், தோப்பூர் காசநோய் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இம்மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனர். தற்போது ஐந்து இடங்களிலும் மொத்தம் 750 சுகாதார, துாய்மைப்பணியிலும், செக்யூரிட்டிகளாகவும் உள்ளனர். இந்தப் பிரிவுகளுக்க மேலும் 250 பேர் வரை தேவைப்படும் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு சமாளிக்கின்றனர். புதிய கட்டடங்கள்
2024 ஜனவரியில் அரசு மருத்துவமனையின் உள்ளே ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் இணைந்து ரூ.313 கோடியில் தரைத்தளம் மற்றும் ஆறுதளங்களுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்க வளாகம் அமைக்கப்பட்டது. கீழ்த்தளத்தில் இதய சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை வார்டுகளும், அடுத்தடுத்த தளங்களில் 22 அறுவை சிகிச்சை அரங்குகள், ஒரு அதிநவீன ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கு கட்டப்பட்டுள்ளன.இந்த வளாகம் முழுவதையும் பராமரிக்கவும், துாய்மைப்பணி மற்றும் செக்யூரிட்டி பணிக்காக 100 பேர் தனியாக நியமிக்கப்படுவதாக திறப்புவிழாவுக்கு வந்த அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார். ஓராண்டாகியும் இன்று வரை ஊழியர்களை நியமிக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் வளாகங்களில் உள்ள சிலரை பணியமர்த்தி வேலை வாங்குகின்றனர். இதனால் எந்த வளாகத்திலும் துாய்மைப்பணி, சுகாதாரப்பணிகளைச் செய்வதற்கு ஊழியர்கள் முழுமையாக இல்லை.தற்போது அரசு மருத்துவக் கல்லுாரி அருகே புதிதாக குழந்தைகள் நலப்பிரிவு கட்டுமானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்கென தனியாக 50 பேர் துாய்மை, சுகாதார, செக்யூரிட்டி பணிகளுக்கு தேவைப்படுகின்றனர். டாக்டர்கள், நர்ஸ்கள் சிகிச்சை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். சுகாதார, துாய்மைப் பணிகளுக்கு ஆட்களை நியமிப்பதுதான் அடிப்படையான விஷயம். பல கோடிகளில் கட்டடங்கள் கட்டி முடித்து அதை பராமரிக்க போதிய ஊழியர்களை நியமிக்காவிடில் அதன் விளைவு நோயாளிகள் தலையில்தான் விடியும். அவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி புதிய அறுவை சிகிச்சை வளாகத்திற்கு தனியாக நுாறு பேர் நியமிப்பதோடு பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்கும் தற்காலிக அடிப்படையிலாவது உடனே நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.