| ADDED : டிச 03, 2025 06:39 AM
மதுரை: ஜி.எஸ்.டி., வரியில் இன்னமும் சீர்திருத்தம் செய்யாத இனங்களுக்கு வரி சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது: சமீபத்திய வரிச்சீரமைப்பில் பல்வேறு பொருட்களுக்கு வரி சீரமைக்கப்பட்டு வரிவிலக்கு செய்யப்பட்டது அல்லது வரி குறைக்கப்பட்டது. அரிசி, பருப்பு, மாவு, கோதுமை, சிறுதானியம், வெல்லம், கருப்பட்டிக்கான 25 கிலோவுக்கு கீழ் உள்ள 'பேக்கிங்' கிற்கு வரி விதிக்கப்படுகிறது. 25 கிலோவுக்கு மேல் உள்ள 'பேக்கிங்' பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளது. எடையைப் பற்றி கணக்கிடாமல் அனைத்து எடை 'பேக்கிங்' பொருட்களுக்கும், ஈரஇட்லி மாவுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். களிமண்ணில் தயாரிக்கப்படும் செங்கல்லுக்கு உள்ளீட்டு வரியின்றி 6 சதவீதம், உள்ளீட்டு வரியுடன் (ஐ.டி.சி.,) 12 சதவீதம் என்று உள்ளதை உள்ளீட்டு வரியுடன் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். பூஜை கற்பூரத்திற்கான 18 சதவீத வரியை 5 சதவீதமாக்க வேண்டும். வரிக் குறைப்பின் போது விடுபட்டு போன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் கூடுதல் வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். நோட்டுபுத்தகம், பதிவேடு, டைரி, கம்ப்யூட்டர் சார்ந்த பேப்பர், காலண்டர் அனைத்திற்கும் 5 சதவீத வரியாக மாற்ற வேண்டும். வரிச்சீரமைப்பில் விடுபட்டு போனதால் இப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரியில் மத்திய அரசு தாமதமின்றி வரி சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றனர்.