| ADDED : பிப் 23, 2024 06:20 AM
மதுரை : மதுரையில் பள்ளி மாணவர்களின் ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பொறுப்பை ஆசிரியர்களிடம் வழங்கியுள்ளதால் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி உதவித் தொகைகள், புதுமைப் பெண் திட்டம், உயர்கல்வி வரையிலான உதவித் தொகைகள் வழங்குவதற்கு மாணவர்களின் வங்கிக் கணக்குகள் சரிபார்ப்பு, ஆதார் திருத்தம் உள்ளிட்டவற்றை சரிபார்க்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக மாணவர்களுக்கான ஆதாரில் ஏராளமான திருத்தங்கள் உள்ளன. இதனால் வங்கிக் கணக்குகள் துவங்க, புதுப்பிக்க புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை திருத்துவது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அதை கவனிப்பதால் பொதுத் தேர்வு நேரத்தில் கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக புலம்புகின்றனர்.மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பிரபாகரன் கூறியதாவது: ஆதார் திருத்தங்களை எளிதாக மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு திருத்தத்திற்கும் போஸ்ட் ஆபீஸ் அல்லது இ சேவை மையங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. மாணவிகள் நலன் கருதி ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டியுள்ளது. இதை எளிதாக்க பள்ளிகளில் ஆதார் திருத்தங்கள் சிறப்பு முகாம்களை நடத்த கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.