உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாயுமானவர் திட்டம் ரேஷனில் முடங்கும் அபாயம் கார்டுதாரர்களின் கருவிழி, கைரேகை பதிய முடியவில்லை

தாயுமானவர் திட்டம் ரேஷனில் முடங்கும் அபாயம் கார்டுதாரர்களின் கருவிழி, கைரேகை பதிய முடியவில்லை

மதுரை: முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர் திட்டம்' வரவேற்பைப் பெற்றாலும் முதியோர்களின் கருவிழி, கைரேகையை பதிவு செய்யமுடியவில்லை என ரேஷன் கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ரேஷன் கடையிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் என சராசரியாக 70 பேர் வரை உள்ளனர். தமிழகத்தில் குறைந்தது ஒரு கோடி பேருக்கு மேல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். அரசு சொன்னதை நிறைவேற்ற தயாராக உள்ளோம். கடைக்கு வரும் கார்டுதாரர்களின் கை ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து 'ப்ளூடூத்' முறையில் மின்னணு தராசு வைத்து துல்லியமாக எடையிட்டு பொருட்களை வழங்குகிறோம். 'தாயுமானவர்' திட்டத்திலும் மின்னணு தராசை எடுத்துச் சென்று விரல்ரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கை விரல்களை பிடித்து அழுத்தி ரேகையை பதிவு செய்ய போராட வேண்டியுள்ளது. கண்கள் தளர்ந்து போயுள்ளதால் கருவிழி ரேகை பதிவு செய்வதும் சிரமமாக உள்ளது. வயதானவர்கள் காய்ச்சல், பிறவகை தொற்று நோயாளிகளாக இருந்தால் அவர்களின் கையைப் பிடித்து இயந்திரத்தில் ரேகை பதிவு செய்யும் போது எங்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எங்களின் உடல்நலத்திலும் தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும். அதேநேரத்தில் கார்டுதாரர்களையும் கஷ்டப்படுத்துவதை தவிர்க்க இவர்களுக்கு மட்டும் 'ப்ளூடூத்' முறையை கைவிட்டால் போதும். வீடுகளுக்குச் சென்று பொருட்கள் வழங்கும் போது அவர்களின் கார்டில் பொருளை பதிவு செய்வதற்கு அரசு உத்தரவிட்டால் யாருக்கும் பாதகமின்றி தாயுமானவர் திட்டம் சிறப்பாக செயல்படும். மேலும் மாதத்தில் 2வது சனி, ஞாயிறு முடிந்த பின்பே தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதை முதலாவது ஞாயிறு, திங்கள் என்று மாற்றியுள்ள கூட்டுறவுத்துறை அதிகாரிகள், சொன்னபடி கடைகளை திறக்காவிட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இதையும் முன்பு போல மாற்ற வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை