| ADDED : பிப் 13, 2024 04:02 AM
மதுரை, : வருமான வரி சட்டத் திருத்தத்தின் கீழ் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல வியாபாரிகளுக்கும் சலுகை வழங்க வேண்டும் என மதுரை வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உத்யம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள குறு, சிறு நிறுவனங்களின் விற்பனைகளுக்கு தாமதமில்லாமல் உரிய நேரத்தில் சரக்கை வாங்கியவர் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 43 (பி) திருத்தப்பட்டு (எச்) என்ற உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது 2023 ம் ஆண்டு நிதிச்சட்டத்தில் அறிவிக்கப்பட்டு 2024 -- 25ம் வரிவிதிப்பு ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.இந்த திருத்தத்தின்படி குறு, சிறு நிறுவனங்களிடம் சரக்கை வாங்கியவர், 15 நாட்களுக்குள் அதற்கான தொகையை செலுத்த வேண்டும் அல்லது இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்திருந்தால் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் சரக்கு வாங்கியதற்கான தொகையை குறு சிறு நிறுவனங்களிடம் செலுத்த வேண்டும்.எம்.எஸ்.எம்.இ., சட்டப் பிரிவு 15 ன் கீழ், குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகையை செலுத்தாவிட்டால், அந்த தொகையை சரக்கு வாங்கியவரின் வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருமான வரி விதிக்கப்படும். அவர் எப்போது குறு சிறு நிறுவனங்களிடம் சரக்கு வாங்கியதற்கான தொகையை திரும்ப செலுத்துகிறாரோ அப்போதைய ஆண்டில் தான் அத்தொகையை செலவாக ஏற்று கழித்துக் கொள்ளப்படும். குறு நிறுவனத்தின் ஆண்டு விற்பனைத் தொகை ரூ.5 கோடி, சிறு நிறுவனத்தின் ஆண்டு விற்பனைத் தொகை ரூ.50 கோடிக்குள் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கும் சலுகை வேண்டும்
கடனுக்குச் சரக்கை விற்கும் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கும் வேளாண் உணவுப் பொருட்கள் வியாபாரிகளுக்கும் இச்சட்டத்திருத்தம் வரப்பிரசாதமாக இருக்கும். பாக்கி தொகை உடனுக்குடன் வசூலாகி நிதி நெருக்கடி இல்லாமல் வியாபாரம் முடியும். ஆனால் இச்சட்டத்திருத்தம் குறு மற்றும் சிறு தயாரிப்புத் தொழில்களுக்குத்தான் பொருந்தும் என்றும் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளுக்குப் பொருந்தாது என்றும் மாறுபட்ட கருத்தை வரி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் எம்.எஸ்.எம்.இ. சட்டத்தின் கீழ் 2021 ஜூலை 7 முதல் உத்யம் இணையதளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதிவு செய்துள்ள வியாபாரிகளுக்கும் நிதி நெருக்கடியிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் வருமான வரிச்சட்டப் பிரிவு 43 பி (எச்) திருத்தம் வியாபாரிகளுக்கும் பொருந்தும் என உடனடியாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்க வேண்டும் என்றனர்.