மேலும் செய்திகள்
மோசடி வழக்கில் ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு
19-Sep-2024
மதுரை : மதுரையில் ரவுடி முருகன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்தவர்கள் முருகன் (எ) கல்லுமண்டையன், கவியரசு. இவர்கள் மீது சில வழக்குகள் இருந்தன. மதுரை தெப்பக்குளம் சோதனைச்சாவடி அருகே 2010 ல் அப்போதைய போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளத்துரை உள்ளிட்ட சில போலீசாரை ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்தினர். தற்காப்பிற்காக போலீசார் இருவரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். வெள்ளத்துரையின் புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.முருகனின் தாய் குருவம்மாள்,'மகனை போலீசார் போலி என்கவுன்டரில் கொன்றனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என 2010 ல் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தேன். வழக்கு பதிய வேண்டும். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.அரசு தரப்பு: கவியரசு மீது 75 வழக்குகள், முருகன் மீது 25 வழக்குகள் இருந்தன. இருவருமே ரவுடிகள் சரித்திர பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு 2017 ல் மாற்றப்பட்டது. மதுரை (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி.,2019 ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. பின் சி.பி.சி.ஐ.டி.,அறிக்கையின் அடிப்படையில் வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிட அரசு முடிவு செய்தது. இதற்கு எதிராக குருவம்மாள் மதுரை (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: தமிழகம் சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலங்களில் ஒன்று. சட்டத்தை அமல்படுத்தும் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக காவல்துறை இருந்தபோதிலும், இந்நீதிமன்றம் கவலையுடன் கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்கிறது. போலீசாரை தாக்க முயலும் பயங்கரமான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, பின் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அல்லது காயமடைவது, குற்றவாளிகள் தப்பிக்க முயல்வது, கீழே விழுந்து கைகளில் முறிவு ஏற்படுவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது. குற்றவாளி செய்த குறிப்பிட்ட குற்றத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், இது ஒரு அடிப்படைத் தவறு, பிற்போக்கான சிந்தனை என்பதை உணராமல், இவ்வாறு கொல்லப்படுவதை பாராட்டத் துவங்குகிறது. இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு முழுமையாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் சட்டத்தை அமலாக்கும் அமைப்பின் மீது நம்பிக்கையின்மையை இது சுட்டிக்காட்டுகிறது. இந்திய போலீஸ் சட்டம் 1861ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. காலனித்துவ காலத்தை நினைவுபடுத்துகிறது. ஜனநாயகத்திற்கு முரணானது.உடனடி மரணம் ஒரு சரியான தண்டனை மற்றும் அது தடுப்பு நடவடிக்கையை கொண்டுள்ளது என்ற நம்பிக்கை கட்டுக்கதைகள் மட்டுமே. அது உண்மை அல்ல. இம்மனு அனுமதிக்கப்படுகிறது. போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. வெள்ளதுரைக்கு மேல் பதவியில் சி.பி.சி.ஐ.டி.,யில் இருக்கும் ஒரு உயரதிகாரியை நியமித்து இவ்வழக்கை விசாரிக்க டி.ஜி.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் அளித்த புகாரின்பேரில் விசாரணை அதிகாரி வழக்கு பதிய வேண்டும். விரைவாக விசாரித்து 6 மாதங்களுக்கு பின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
19-Sep-2024