மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கலைஞர் நுாற்றாண்டு நுாலகம்; இதுவரை 19.42 லட்சம் பேர் வருகை
மதுரை : மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரம் பேர் நுாலகத்தை பயன்படுத்தியுள்ளதாக முதன்மை நுாலகர் தினேஷ்குமார் தெரிவித்தார். இந்நுாலகத்தில் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. நுாலகத்தின் கையேட்டை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி வெளியிட்டு பேசியதாவது: கோவை, திருச்சியில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டு வருகிறது. சேலம், திருநெல்வேலி, கடலுாரில் இதை விட பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. தற்போது இங்கு சொந்த நுால்கள் கொண்டு வந்து படிப்போர் வாகன நிறுத்தம், வெளி வளாகத்தில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அவர்களின் வசதிக்காக ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். அந்த பணி அடுத்த 10 மாதத்தில் நிறைவடையும் என்றார். நுாலக ஆண்டறிக்கையை வெளியிட்டு முதன்மை நுாலகர் தினேஷ்குமார் பேசியதாவது: நுாலகம் தொடங்கியது முதல் இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரம் பேர் வந்துள்ளனர். முதல் ஆண்டில் 9.51 லட்சம் பேர், 2ம் ஆண்டில் 9.90 லட்சம் பேர் வந்துள்ளனர். 1.2 லட்சம் நுால்கள் இரவல் பெறப்பட்டுள்ளன. 7 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நுாலகத்தை பயன்படுத்தி 29 பேர் அரசுப் பணியில் தேர்வாகியுள்ளனர் என்றார். நிகழ்வில் மின் செயற்பொறியாளர் இரணியன், துணை முதன்மை நுாலகர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'லிட்டில் ஆதர்ஸ்' திட்டம் துவக்க முடிவு
நுாலகர் ஜெபஜோஸ்லின் கூறியதாவது: வரும் ஆண்டில் எழுத்தாளர்களை உருவாக்க படைப்பாளர் அரங்கம் உருவாக்கப்படும். குழந்தைகள் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை புத்தகங்களாக வெளியிட 'லிட்டில் ஆதர்ஸ்' திட்டம் தொடங்கப்படும். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்க பிரத்யேக மையம் உருவாக்கப்படும். சர்வதேச அளவில் புகழ் பெற்ற 'யுடெமி', 'கோர்சேரா' இணைய கல்வி தளங்கள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சிகளும், மூத்த குடிமக்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சியும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி பயிற்சி வகுப்பும் நடத்தப்படும். தொழில் முனைவோருக்கு ஆலோசனையும், சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு டிசைனிங், வீடியோ எடிட்டிங் பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.