ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி வெண்ணெயில் துர்நாற்றம்
மதுரை: உ.பி.,யில் உள்ள தனியார் பால் நிறுவனத்திடமிருந்து, மதுரை ஆவினுக்கு அனுப்பப்பட்ட, 4 கோடி ரூபாய் மதிப்பிலான வெண்ணெய் துர்நாற்றம் வீசியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உத்தரபிரதேசம், கிர்பா ராம் டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கடந்த மாதம் மூன்று கட்டங்களாக, 81 டன் வெண்ணெய் மதுரை ஆவினுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மதிப்பு, 4 கோடி ரூபாய். ஆவின் அலுவலகத்தில் மைனஸ் 18 டிகிரியில் உள்ள குளிரூட்டியில் அவை வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட போது துர்நாற்றம் வீசியதால் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, சென்னை பெடரேஷன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, மீண்டும் உ.பி., நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் மதுரை ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆவின் அலுவலர்கள் கூறியதாவது: தனியார் நிறுவனம் வெண்ணெய் கொண்டு வரும் போது, அதை இறக்கி வைப்பதற்கு முன்பே உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு தரமானதா என ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லையென்றால் அப்போதே திருப்பி அனுப்பி இருக்கலாம். ஆனால், உரிய பரிசோதனை நடக்கவில்லை. தற்போது திருப்பி அனுப்பப்படும் வெண்ணெயை அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம். அவ்வாறு ஏற்கவில்லையென்றால் அதற்கான நஷ்டத்தை எவ்வாறு ஈடுகட்டுவது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.