விரிவாக்க வார்டுகளின் தொகுப்பூதிய பணியாளர்கள் குமுறல்; மாநகராட்சி அலுவலக பணிகளுக்கு பயன்படுத்த எதிர்பார்ப்பு
மதுரை: மதுரை மாநகராட்சியில் 14 ஆண்டுகளாக விரிவாக்க வார்டுகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களின் திறமைக்கு ஏற்ப அலுவலகப்பணிகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மதுரை மாநகராட்சியின் 72 வார்டுகள், 2011ல் நுாறு வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. அப்போது மாநகராட்சிக்குள் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில், பழைய உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய அடிப்படை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதிய பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.ஆனால் 2011 ல் அவர்களுக்கு என்ன பணிகள் ஒதுக்கப்பட்டதோ அதே வகையான பணிகள்தான் 14 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதிகள் பெற்றுள்ளனர். ஆனால் மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பு, மோட்டார் இயக்குதல் உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர். பலருக்கு பணிகள் குறைவாகவே உள்ளன. அதேநேரம் வரிவசூல், இளநிலை உதவியாளர்களின் தேவை, நகர் வார்டுகளில் அதிகளவில் உள்ளது. அவர்களை இப்பணிகளுக்கு மாற்றினால் பணியாளர் பற்றாக்குறை தீரும் வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: தினமும் சில மணிநேரமே அவர்கள் பணி மேற்கொள்வதாக உள்ளது. தற்போது மாதம் ரூ.19 ஆயித்து 500 வரை அவர்கள் சம்பளம் உயர்ந்துள்ளது. அதற்கேற்ப சிலருக்கு கூடுதல் பணிகள் ஒதுக்கீடு செய்யலாம். பட்டம், டிப்ளமோ முடித்தவர்களை அவர்களின் திறமைக்கு ஏற்ப பில் கலெக்டர்கள், இளநிலை உதவியாளர்கள், பள்ளி உதவியாளர்கள், ஓட்டுநர் பணிகளுக்கு மாற்றலாம். இப்பிரிவுகளுக்கு பலர் தேவையாக உள்ளனர். கமிஷனர் சித்ரா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.