| ADDED : நவ 15, 2025 05:56 AM
மதுரை: ''தொழில் துவங்குவதற்கான எல்லா திட்டத்திலும் பெண் தொழில் முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு உள்ளதென'' இந்திய மகளிர் கூட்டமைப்பு (ஐவின்) கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் தெரிவித்தார். அமைப்பாளர் பூர்ணிமா வரவேற்றார். பொதுமேலாளர் கணேசன் பேசியதாவது: பிரதமரின் பி.எம்.இ.ஜி.பி., திட்டம், மாநில அரசின் யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம், நீட்ஸ் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களிலும் பெண் தொழில்முனைவோருக்கு 50 சதவீத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தொழில் தொடங்க பெண்கள் முன்வர வேண்டும். பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் உற்பத்தி, சேவைத்தொழிலில் ஈடுபடலாம். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்பினால் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் கிராமத் தொழில்கள் வாரியம், மாவட்ட தொழில் மையம், காயர் போர்டு அலுவலகங்களை அணுகலாம். விண்ணப்ப படிவம் பெறுவது முதல் மானியம் வழங்குவது வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் செயல் படுத்தப்படுகிறது. மாநில அரசின் யு.ஓய்.இ.ஜி.பி., திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை வியாபாரம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. அதேபோல 'நீட்ஸ்' திட்டத்தின் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு உற்பத்தி, சேவைத்தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான இ.பி., தீயணைப்பு துறை உட்பட பல்வேறு துறைகளின் சான்றிதழ் பெற மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 'சிங்கிள் விண்டோ' முறையை அணுகலாம் என்றார். இணை அமைப்பாளர் ஹேமா நன்றி கூறினார். நிர்வாகி சத்யா ஒருங்கிணைத்தார்.