உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அச்சுறுத்தும் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம்; தோட்டக்கலை துறையினர் இன்று போராட்டம்

 அச்சுறுத்தும் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம்; தோட்டக்கலை துறையினர் இன்று போராட்டம்

மதுரை: தமிழகத்தில் 1979 ல் தோட்டக்கலைத்துறை பிரிக்கப்பட்ட நிலையில், 'உழவர் அலுவலர் தொடர்பு 2.0' திட்டத்தின் (யு.ஏ.டி.டி.,) கீழ் உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை (ஏ.எச்.ஓ .,) மீண்டும் வேளாண் துறையின் கீழ் கொண்டு வருவதை கண்டித்து தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலசங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறைகளின் கீழ் தனித்தனியாக அலுவலர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். வேளாண், தோட்டக்கலைத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வெழுதி வேளாண் உதவி அலுவலர்கள் (ஏ.ஏ.ஓ.,), தோட்டக்கலை உதவி அலுவலர்களாக (ஏ.எச்.ஓ.,) பணியில் உள்ளனர். வேளாண், தோட்டக்கலைத்துறையில் பிர்காவிற்கு ஒரு ஏ.ஏ.ஓ., ஏ.எச்.ஓ.,க்கள் பணியில் உள்ளனர். அந்த பகுதியில் அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்குமான ஆலோசனைகளை ஏ.எச்.ஓ.,க்கள் விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். அரசின் புதிய திட்டங்களை சேர்ப்பதோடு பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால் தோட்டத்திற்கு நேரடியாக சென்று தீர்வு காண்கின்றனர். ஒரு பிர்காவில் 10 முதல் 12 கிராமங்கள் இருக்கும். குழப்பத்திற்கு காரணம் தமிழக அரசு 2023 ஜனவரியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0ஐ அறிமுகப்படுத்தியது. தோட்டக்கலைத்துறையில் பிர்காவுக்கு ஒரு ஏ.எச்.ஓ., என்றிருந்ததை 4 கிராமங்களுக்கு ஒரு ஏ.எச்.ஓ., என மாற்றியுள்ளனர் அதிகாரிகள். அந்த 4 கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, காய்கறி பயிர், பசுமை குடில்களை கண்காணிப்பதோடு, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் செயல்படுத்தும் திட்டங்களையும் கண்காணிக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்கின்றனர் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலச்சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர். அவர்கள் கூறியதாவது: உதவி வேளாண் அலுவலர்களுக்கு பாலிஹவுஸ் திட்டம், காய்கறி பயிர் சாகுபடி பற்றி தெரியாது. எங்களால் நெல், பிற வேளாண் பயிர்களை கையாள முடியாது. திடீரென நெல்லில் நோய் தாக்கினால் ஆலோசனை சொல்ல முடியுமா. இவ்வளவு நாட்கள் தோட்டக்கலைத்துறையில் வேலை பார்த்து விட்டு இப்போது வேளாண் துறையின் கீழ் செயல்படுவது சாத்தியமில்லை. யு.ஏ.டி.டி., திட்டத்திற்காக மறுசீரமைப்பு என்ற பெயரில் எங்களை திடீரென வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். வேளாண் துறையில் இருந்து 1979 லேயே தோட்டக்கலைத் துறை பிரிந்து விட்ட நிலையில் மீண்டும் ஒன்றாக்கி குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது அரசு. இதை கண்டித்து இன்று (நவ.,20) அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கவன ஈரப்பு போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ