டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க உதயகுமார் வலியுறுத்தல்
பேரையூர் அரசு மருத்துவமனைக்குபேரையூர்: பேரையூர் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள், வாட்ச்மேன் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும் என சட்டபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் வலியுறுத்தினார்.இம்மருத்துவமனை டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதை அடிப்படையாக கொண்டு மதுரை கலெக்டர் சங்கீதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரையூரைச் சுற்றி நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். 10 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் மூன்று டாக்டர்கள் தான் உள்ளனர். ஆபரேஷன் தியேட்டர் ஒரு காட்சி பொருளாக உள்ளது. துாய்மை பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. போதிய எண்ணிக்கையில் செவிலியர் இல்லை.பிரேத பரிசோதனை கூடம் இல்லாததால் உசிலம்பட்டி அல்லது திருமங்கலம், மதுரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது போலீசாருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதுவரை வாட்ச்மேன் நியமிக்கப்படாததால் இரவில் இங்கு பணியில் இருக்கும் ஒரே ஒரு செவிலியர் அச்சத்தில் உள்ளார். காலை 9:00 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை மட்டுமே டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மற்ற நேரங்களில் பணியில் இருக்கும் ஒரு செவிலியர் உள்நோயாளிகளையும், வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதால் மிகவும் சிரமத்தில் உள்ளார்.ஆகவே கலெக்டர் பேரையூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகளை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.