தேங்கும் குப்பையால் உசிலை நாறுது
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 3,4 பகுதியில் சேரும் குப்பையை வத்தலக்குண்டு ரோட்டில் கண்மாய்கரை அருகில் குவித்து குப்பை லாரிகள் மூலமாக சுகாதார பணியாளர்கள் அகற்றிச் செல்வர். குப்பையை அகற்ற ஒப்பந்தம் செய்திருந்த ஒப்பந்ததாரர் முறையாக செயல்படாததால் நகராட்சி நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் நகராட்சியில் போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லாமல் வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பணியும் நடக்கவில்லை. தெருக்களில் தேங்கும் குப்பையும் அகற்றப்படாமல் உள்ளது.பா.ஜ., நிர்வாகி தினகரன்: தேங்கிய குப்பையில் இரவில் தீ வைத்து எரிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற பணியாளர்கள் இல்லை என்கின்றனர். பணியாளர்களை நியமித்து குப்பையை அகற்றாவிட்டால் பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி துாய்மை இந்தியா திட்டத்தில் நாங்கள் களம் இறங்கி குப்பையை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.