| ADDED : டிச 27, 2025 06:51 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் பள்ளி மாணவியரின் இடைநிற்றலை தடுக்க அரசு பெண்கள் பள்ளி, கல்லுாரி துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெண்கள் மேம்பாட்டுக்கென அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறது. உசிலம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள நிலையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாகவே இருந்து வருகிறது. அரசு ஆண்கள் பள்ளி இயங்கிய பகுதியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று இடத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்டி இட மாற்றம் செய்தனர். ஆண்கள் பள்ளி இயங்கிய பகுதியில் பெண்கள் பள்ளி துவக்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அப்போது உசிலம்பட்டிக்கு ஒதுக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரி தற்காலிகமாக பழைய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் உத்தப்பநாயக்கனுாரில் பாலிடெக்னிக் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டி மாற்றம் செய்தனர். அதன்பின் பழைய ஆண்கள் பள்ளியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. இந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைத்து, ஏற்கனவே அறிவித்தபடி பெண்கள் பள்ளியை துவக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் ராஜேந்திரன்: உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் 2 தனியார் பெண்கள் பள்ளிகள் உள்ளன. ஆனால், கிராமங்களில் துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவிகளுக்கு வசதியாக அரசு பெண்கள் பள்ளி இல்லை. தனியார் பள்ளிகளிலும், கிராமப்புற பள்ளிகளிலும் போதுமான இட வசதி இல்லாமல் போவதால் மாணவியரின் இடைநிற்றல் அதிகமாகிறது. கடந்தாண்டு மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்களில் 1,500 பேர் இடைநிற்றல் இருந்தது. இவர்களில் 800 பேர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இடைநிற்றல் மாணவர்கள் வேறு பணிக்குச் செல்லும் நிலையில், மாணவியரை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுப்பது அதிகரிக்கிறது. பழைய அரசு மாணவர்கள் பள்ளியில் வகுப்பறை, ஆய்வகக் கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. அவற்றை சீரமைத்து அரசு பெண்கள் பள்ளி துவக்கி, மாணவியரின் இடைநிற்றலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயர்கல்விக்கென பெண்கள் கல்லுாரியும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.