| ADDED : செப் 17, 2025 03:26 AM
மதுரை : அதிக வெயிலின் தாக்கத்தால் தவித்த மதுரையில் திடீர் திடீரென மழை பெய்வதால் ப்ளூ, டெங்கு உட்பட வைரல் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை மாவட்டம் முழுவதும் தினமும் சராசரியாக 10 பேர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் இரண்டு முறை பெய்த மழையால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. நேற்று 26 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் தாங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் ரத்தப்பரிசோதனை செய்வது நல்லது என்கிறார் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன். அவர் கூறியதாவது: கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தான் தற்போதும் சிகிச்சையில் உள்ளனர். புதிய பாதிப்பு இல்லை, கொரோனோ தொற்று பதிவாகவில்லை. மொத்தமுள்ள 58 பேரில் தனியார் மருத்துவமனையில் மட்டும் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு, வைரஸ் காய்ச்சல், எலி காய்ச்சல் (லெப்டோ), உன்னி காய்ச்சல் (ஸ்கிரப்) என எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் சிகிச்சை பெறுவது அவசியம். டெங்கு, ப்ளூ உட்பட வைரல் காய்ச்சலுக்கும் ரத்தத் தட்டணுக்கள் குறையும். சுகாதாரத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 88 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் வசதி உள்ளது. காய்ச்சல் 3 நாளைக்கு மேல் தொடர்ந்தால் ரத்தப்பரிசோதனை அவசியம். சமயநல்லுார் ஆரம்ப சுகாதார வளாகத்தில் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் உள்ளது. இங்கு ரத்தப்பரிசோதனை செய்யும் வசதியும் குடிநீரில் கலப்படம் உள்ளதா, பாக்டீரியா தொற்று உள்ளதா என கண்டறியும் வசதி உள்ளது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் ரத்த மாதிரி, குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்கிறோம். வீடுகளில் ஆய்வு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொசுப்புழு ஒழிப்பாளரை ஆய்வுக்கு அனுப்புகிறோம்.பாத்திரங்களில் உள்ள தண்ணீர் மூடப்பட்டுள்ளதா, பிரிட்ஜ் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா, வீட்டைச் சுற்றி உடைந்த தேங்காய், சிரட்டை, டயர்களில் தேங்கி கொசுப்புழு உள்ளதா என ஆய்வு செய்கின்றனர். வீடுகளில் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக கொசுவின் புழுக்கள் இருந்தால் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 2ம் முறையும் இந்நிலை தொடர்ந்தால் பொது சுகாதாரத்துறை மூலம் நோட்டீஸ் வினியோகிக்கிறோம். பழைய பொருட்கள் விற்பனை கடைகள் சுகாதாரமின்றி இருந்தால் முதல்முறை நோட்டீஸ் வழங்குவதோடு 2வது முறை ரூ.500 முதல் அபராதம் விதிக்கிறோம். கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பதோடு குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். இவ்வாறு கூறினார்.