ரோட்டில் ஆறாக ஓடும் கழிவு நீர்
கொட்டாம்பட்டி: பால்குடியில் கழிவு நீர் ரோட்டை கடந்து வெளியேற கால்வாய் அமைக்காததால் நிரந்தரமாக தேங்கி, மக்களின் ஆரோக்கி யத்தைக் கேள்விக்குறி யாக்குகிறது. கச்சிராயன்பட்டி ஊராட்சி கணேசபுரம் முதல் கே. புதூர் வரை 3 கி.மீ., தொலைவுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் ஒருமாதத்திற்கு முன் புதிதாக ரோடு அமைக்கும் பணி துவங்கியது. இக்கிராமங்களுக்கு இடையே உள்ள பால்குடி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் கட்டப்பட்டது. அப்பணிகளை பாதியில் நிறுத்தியதால் கழிவு நீர் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கால்வாய் பணியை முடிக்காமல், ரோடு அமைக்கும் பணியை துவங்கியதால் அதனை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். காஜா பக்ருதீன் என்பவர் கூறியதாவது: பால்குடி கால்வாய் மற்றும் ரோட்டில் கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளது. கிராமத்தினர் ரோடு பணியை நிறுத்தியதால், அங்கு வந்த ஒன்றிய அதிகாரியிடம் கால்வாய் அமைக்க வலியுறுத்தினர். கால்வாய் அமைப்பதாக கூறினரே தவிர, கட்டவில்லை. அதேசமயம் ரோட்டை தோண்டியதால் ஜல்லிக் கற்கள் பரவிக் கிடக்கிறது. நடந்து செல்வோர் காயமடைகின்றனர். கழிவு நீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.