உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உப்பு தண்ணீர் பருகுகிறோம் உயிர் பயத்தில் தவிக்கிறோம்

உப்பு தண்ணீர் பருகுகிறோம் உயிர் பயத்தில் தவிக்கிறோம்

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் உப்புத் தண்ணீரை பயன்படுத்தும் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.கருங்காலக்குடியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவ்வூராட்சியில் போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தன்மையுடன் உள்ளது. எனவே, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் 4 ஆண்டுகளுக்கு முன் நல்லகுளம் கரையில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. ஒரு குடம் தண்ணீரை ரூ.5க்கு பெற்று பயன்படுத்தினர். தற்போது இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளதால் மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்பகுதியினர் கூறியதாவது: சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் ஒருமாதமாக உப்பு நீரையே குடிநீராக பயன்படுத்துகிறோம். ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் சரிசெய்யவில்லை. எனவே, சிலர் குடம் நீரை ரூ.15 க்கு வாங்குகின்றனர். ஏழை, எளியோர் வாங்க வழியின்றி உப்பு நீரையே பயன்படுத்துவதால் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். தற்போது கோடை நேரத்தில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றனர்.பி.டி.ஒ., சங்கர் கைலாசம் கூறுகையில், ''உப்பு அதிகம் படிந்துள்ளதால் 5 நாட்கள் தண்ணீர் விநியோகிக்கவில்லை. விரைவில் சரி செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி